நிரந்தர வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டதனால் நிலையில்லா இடமெல்லாம் நிமிடங்களில் நடந்தோம்.
முடிவில்லா... முள்ளிவாய்க்கால்.





முடிவில்லா... முள்ளிவாய்க்கால்.
நிரந்தர வாழ்க்கை
நிர்மூலமாக்கப்பட்டதனால்
நிலையில்லா இடமெல்லாம்
நிமிடங்களில் நடந்தோம்.
நிலம் விழுங்கிப் பூதங்களின்
போரரங்கானது எம்தேசம்.
பாரெல்லாம் சேர்ந்து
படுகொலை
வேட்டையில் உயிர் குடித்து
ஏப்பமிட்டு எள்ளிநகையாடியது.
குண்டு கொட்டி எரிந்தாலும்
கொள்கை சாகவில்லை
உண்மையும் உறங்கவில்லை
எங்களின் உணர்வில்.
யார் வந்தும் எம்மைக்
மீட்கவில்லை
ஊரெல்லாம் சுருங்கி
உறவெல்லாம் கருகி
ஊண் உறக்கம் இன்றி
உருக்குலைந்து
ஊசலாடினோம்.
உணவுப் பொருளில்லை
உறங்க இடமில்லை
ஊர்வென போல
உப்புத் தரையினில்
உருண்டோம்.
கொட்டிய குண்டுகள்
குடில்களில் கொட்ட
சிதறியது சின்ன பிஞ்சுகள்
பதறிப் பாய்ந்து
பரிதவித்தோம்.
பாட்டனும் பூட்டியும்
பதுங்க முடியாமல்
ஓதுங்க இயலாமல்
நடுங்கி நசுங்கி நலிந்து
போனது நினைவில் நீழுது.
முடிவில்லாத போர்க்களம்
விடியல் கூட எறிகணைக்
கூவலில் புலர்ந்தது.
மடியில் பசியில்
பிள்ளை பாலுக்கழும்
பால்மா தேடி அப்பா போனார்
அவர் வரவேயில்லை.
படுகொலை செய்து
பார்த்து இரசித்த
பாதகம் பற்றியெரியாதோ.
உறவுகளுக்கு கொள்ளியும்
வைக்கவில்லை .
சொல்லியும் ஆறுமோ
சோகங்கள் தீருமோ.
தீரமுடன் போர் வென்ற
வீரநிலம் .
தீயில் எரிந்து போனதோ.
காவிக் காவி வந்து
கடப்படியில் போட்டுடைத்த
கதையாகிப் போனதோ
எங்கள் வாழ்வும் வளமும்.
வீழ்ந்ததும் விதைத்ததும்
வீண் போகாது
வீரமும் மானமும் வீழாது
விடுதலைத் தாகமும் ஓயாது
இலட்சியம் ஒருபோதும் சாகாது
சத்தியம் சாட்சி சொல்லும்
செத்தவர் மீதில் சத்தியம்
செய்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தாரகம் இணையத்திற்காக - யாகவி.