வீரவணக்க நிகழ்வு – மேற்கு அவுஸ்ரேலியா 02.08.2025

Total Views : 37
Zoom In Zoom Out Read Later Print

தமிழின வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனாய் தமிழினம் தலைநிமிர, எதிரிகள் அகலக்கால் பதித்த தமிழீழக் களம் எங்கும் போரியல் சாதனைகள் புரிந்து, தமிழீழ தனியரசை நிறுவி, தன் மக்களுக்காய் கொண்ட இலட்சியத்தில் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் இறுதிவரை போரிட்டு வீர வரலாறாகிய தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு 02.08.2025 அன்று பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது.

கடந்த 10.03.2025 அன்று மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவித்தலின் படி 02.08.2025 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமை க்கப்பட்டு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள (Kelmscott Hall. 60 River Road Kelmscott WA 6111) என்னும் முகவரியில் நடைபெற்றது.

02.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதன்மைச் சுடரினை மாவீரர் வீரவேங்கை அக்பர் அவர்களின் சகோதரன் திரு. புஸ்பகுமார் அருணாச்சலம் அவர்கள் ஏற்றி வைத்தார்.


தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசிய கீதம் இசைக்கப்பட அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை திரு. சிவமைந்தன் கமலநாதன் அவர்களும் அவுஸ்ரேலிய பூர்வீக கொடியினை மாவீரர் வீரமைந்தன் அவர்களின் சகோதரன் திரு. சிவசாந்தன் பரராஜசிங்கம் அவர்களும் தமிழீழக் கொடிப்பாடல் இசைக்க தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு கதிர் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து தமிழீழ மண்ணில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடுகல்லை நிறுவுவதற்காக மாவீரரின் திருவுருவப்படம் எடுத்துவரும் போதான நடைமுறைகளை பின்பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட பேழை எமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் அணிவகுக்க, “ஈழம் எனும் வாழும் வழியதன் மீளும் வரலாறாய் சுவடென காலம் சுழல் நீளம் முழுவதும் வரும் கோவே“ எனும் பாடல் வரிகள் ஒலிக்க நிகழ்வு அரங்கத்தினுள் கொண்டுவரப்பட்டது.

திருவுருவப்படம் தாங்கிய பேழை அலங்கரிக்கப்பட பீடம் உள்ள மேடைக்கு அருகில் கொண்டுவரப்பட்டதும் துக்கத்தை குறிக்கும் வகையில் தமிழீழத் தேசியக் கொடி தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு. கதிர் அவர்களால் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து திருவுருவப்படம் தாங்கிய பேழை மேடையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட பீடத்துக்கு எடுத்துசெல்லப்பட்டு நேர்த்தியான முறையில் வைக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த, இறுதிப் போரில் வீரச்சாவை தழுவிய தமிழீழத் தேசியத் தலைவரின் பிள்ளைகள் உட்பட்ட தேசியத் தலைவரின் குடும்ப திருவுருவப்படம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு காப்பரணாக நின்று இறுதிவரை போரிட்டு வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் நினைவான பொது திருவுருவப்படம் என்பவற்றின் திரைகள் நீக்கப்பட்டன.

நிகழ்வின் தொடர்ச்சியாக திருவுருவப்படங்களுக்கான பொது ஈகைச் சுடரினை மாவீரன் கேணல் சால்ஸ் அவர்களின் தாயார் திருமதி சண்முகநாதன் தவமணிதேவி ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய தமிழீழத் தேசியத் தலைவர், மாவீரச் செல்வங்கள் மற்றும் அப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் மிகவும் அமைதியாக தமது அகக்கண்ணில் தமிழீழத் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் நினைந்துருக துயிலுமில்லப் பாடல் ஒலிக்கப்பட்டது.

தொடர்ந்து திருவுருவப்படங்களுக்கான மலர்மாலையை திரு. செந்தூரன் அப்பாத்துரை அவர்கள் அணிவித்து மலர் வணக்கத்தை ஆரம்பித்து வைத்தார். மலர் வணக்கப் பாடல் ஒலிக்க நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் வரிசையாக வந்து மிகவும் உணர்வு பூர்வமாக திருவுருவப்படங்களுக்கு தமது மலர்வணக்கத்தை செலுத்தினர்.

மலர்வணக்கத்தை தொடர்ந்து “பாலைசூழ் நிலமும் பரந்துள காவும் நீலமா கடலும்….“ எனும் கவிவரிகள் திரு. விமலாதித்தன் நடராஜா அவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து மேதகு அகவத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கை திரு. வித்தியாகரன் வால்மேகம் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திரு. ரமணன் கனகரட்ணம் அவர்களால் “தமிழ்த்தாயின் தவப் புதல்வன் எங்கள் தலைவன்” என்ற தலைப்பில் கவிவரிகள் பாடப்பட்டது. தொடர்ந்து திரு. வைகுந்தவாசன் முருகசோதிராஜா அவர்களால் உறுதியுரை வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நிறைவுக்கு வந்தது. வீரவணக்க நிகழ்வை தொகுத்து வழங்கியவர் திரு. வைகுந்தவாசன் முருக சோதிராஜா.

நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வீரவணக்க நிகழ்வு நினைவுக் குறிப்பேட்டில் தேசியத் தலைவர் தொடர்பான தமது உணர்வுகளை நிகழ்வில் கலந்துகொண்டோர் பதிந்து சென்றனர். இறுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க திருவுருவப் படம் வீரவணக்க நிகழ்வின் நினைவாக கலந்துகொண்டோருக்கு வழங்கப்பட்டது.

நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை
(மேற்கு அவுஸ்ரேலியா)