தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 கவிதை உதிரம் உறைந்த உப்பு மணல்வெளி அமைதியான முல்லை மண் அதிர்ந்த காலமது -இனி
உதிரம் உறைந்த உப்பு மணல்வெளி - தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 கவிதை....!





தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18
கவிதை
உதிரம் உறைந்த உப்பு மணல்வெளி
அமைதியான முல்லை மண் அதிர்ந்த காலமது -இனி
உயிரோடு இருப்போமா இல்லையா என்ற நம்பிக்கையற்ற வாழ்வு
நாளும் கந்தகப்புகையில் கருகிக்கொண்டிருந்தது எம்தேசம்
தறப்பாள் கொட்டகைக்குள் கூட நிம்மதியாய் உறங்கிட முடியாத அவல வாழ்வு
உண்பதற்கு எதுமில்லை கால் வேகும் சுடுமணலில் காலூன்றி நடந்தோம்
பிஞ்சுக் கால்கள் வெந்தே போனது
அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ள சட்டியோடு கஞ்சி வாங்க ஓடினோம்.
கஞ்சி வாங்கவும் சிங்களம் எம்மை விடவில்லை.
கஞ்சி வாங்கி உயிரக் கையில பிடிச்சுக் கொண்டு பதுங்கு குழிகளில் தஞ்சமானோம்.
கழிப்பறை இல்லை,அதனால் இயற்கையையே இயன்றவரை தடுத்தோம்.
இரவும் பகலும் கூவும் எறிகணைகளும் வான் கழுகுகளின் இரச்சலும் குண்டு சத்தங்களும் எம் செவிகளில் ஒலித்த வண்ணமே இருந்தது.
பசியால் அழும் குழந்தைக்கு றொட்டி சுட கொட்டகைக்குள் வந்த அம்மா குண்டு மழையில் நனைந்து உருக்குலைந்து கிடக்க,
பசி மறந்து அன்னையை அணைத்த பிள்ளைகள் ஏராளம்.
ஊரிழந்து உறுப்பிழந்து உறவுகளை இழந்து நடைப்பிணமாய் அலைந்த கோலங்கள் யாரறிவார்.
மாத்தலன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பரந்த உப்பு மணல்வெளி தமிழன் உதரத்தால் நனைந்த கோலம் யாரறிவார்.
பெற்ற தாய் தந்தையை கட்டிய கணவனை உடன் பிறந்த சோதர்ரை -ஏன் பெற்ற பிள்ளையைக்கூட புதைக்க முடியாமல் ஓடிய கொடுமையை யாரிடம் சொல்வோம்.
குண்டு துளைத்திட்ட காயத்திற்கு மருத்தும் செய்திட முடியாத கொடுமை
எம் கண்முன்னே கண் சொருகி மாண்டு போனவர் எத்தனை எத்தனை.
தாய் மார்பில் பால் சுவைத்தபடி வாழ்வை முடித்த வலியை யாரிடம் சொல்வது.
சுட்டெரிக்கும் வெயிலில் கைக்குழந்தைகள் தறப்பாளில் வெந்த சோகம் யாரறிவார்.
இவ்வளவு கொடுமைகளைச் சிங்கள அரசு எமக்குத் தந்து திட்டமிட்டே எம்மினத்தைக் கொன்றது.
இனியும் நாம் நீதி கேட்காமல் இருக்கலாமா?
தமிழினத்தை அழித்து முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை தந்த பின்பும் அமைதியாய் வாழ நாமென்ன அடிமைகளா?
நாம் பட்ட அழிவுகளும் இழந்து போன உறவுகளும் கண் முன்னே வந்து போகின்றன.
எல்லாம் கடந்து செல்ல நாமொன்றும் உணர்விழந்தவரல்ல…
எம்மினத்தை அழித்து ஆண்டு பதினைந்து உருண்டோடினாலும் ஓய்ந்திடாது நீதிகேட்டு நாம் நிமிர்வோம்.
ஆம்!
நாம் வாழ்ந்த மண் உதிரம் உறைந்த உப்பு மணல்வெளியாகும்.