தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவித்தல்- தமிழீழ மாவீரர் பணிமனை
தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவித்தல்- தமிழீழ மாவீரர் பணிமனை 10.03.2025





மாவீரர் பணிமனை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
10.03.2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமான
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு
உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்,
இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதிதளராது, முப்பத்தாறு ஆண்டுகளாக எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார்.
சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி திட்டங்களையும் எதிர்கொண்டு , அனை த்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர் திகழ்ந்தார் .
தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி,தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமாரஏற்று, உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 18 என்று தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு செய்து அறியத்தருகிறது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும்,அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு தமிழீழ மாவீரர் பணிமனையூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரிய தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, தமிழினத்தின் அதிஉச்ச வீர அடையாளமாக அவர் திகழ்ந்தார்.
வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும் தமிழர் வரலாற்றில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார் .
எமது அன்பிற்குரிய தாயத்தமிழ் உறவுகளே!
தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
தமிழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக அவரை இறையாக்கி எமது இதயக் கோயிலில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும் .
ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத்தலைவருக்கு, தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக – தமிழக மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது இறுதி வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தும் அதேவேளை அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாட்டொன்றிலும் வரும் 2025 ஆம் ஆண்டு் நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுப்போம் என உறுதி அளிக்கிறோம் .
எங்கள் பெருந் தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”
இ. பிரசாத்
இணைப்பாளர்
மாவீரர் பணிமனை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
10.03.2025